அதிமுகவில் இருந்த நீக்கப்பட்டவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் எம்எல்ஏ, இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக பரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவினர் ஒன்று திரண்டு வருகின்றனர். மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை அதிமுகவினர் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வெளியாகியது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
அதன்படி வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கியுள்ள ஓ பன்னீர்செல்வம், இந்த பொதுச் செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 11:30 மணி அளவில் ஓ பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போது, டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது ஓ பன்னீர்செல்வத்துக்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், பொதுச் செயலாளர் பதவிக்கான இந்த தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான சட்ட போராட்டம் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.