குழந்தைகளிடத்தில் மட்டுமே பாலியல் இச்சை கொள்ளுவதை பீடோபைல் (Paedophile) என சர்வதேச சமூகம் வரையறுத்துள்ளது. இந்த பிரிவினரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் அடக்கம். இவர்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறார்கள் மீது மட்டும் பாலியல் ஆசை ஏற்படும். குழந்தைகள் மீது பாலியல் செயல்களை நிகழ்த்தினால் அதற்கு மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளது.
அதனால் பீடோபைல் பிரிவினர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பாலியல் சுற்றுலா (The child sex tourism industry) வருவதாக செய்திகள் உள்ளது. வறுமை காரணமாக குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கு அனுமதிக்கும் பெற்றோர்களும் மேற்கூறிய நாடுகளில் உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக, குழந்தைகள் பாலியல் வீடியோக்களை அமெரிக்கா சைபர் கண்காணிப்பு நிறுவனங்கள் பாலியல் தளங்களில் இருந்து டெலிட் செய்து வருகின்றன.
அதனால் டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத தளங்களில் சிறார் பாலியல் வீடியோக்கள் பரப்பட்டு வருகின்றன. மேலும் குழந்தைகள் பாலியல் வீடியோக்கள் பதிவேற்றப்படுவதை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. எங்கேனும் வீடியோக்கள் பரப்பபட்டால் அந்த நாட்டிற்கு அமெரிக்கா தகவல் தந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிஎச்டி மாணவரை சிபிஐ தற்போது கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா்.
இவரை சி.பி.ஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் கடந்த 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து இரு நாள்களாக விசாரணை நடத்தினா்.
இவா் பிரதமா் அலுவலகத்துக்கு அவதூறு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது. இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2 நாட்கள் தஞ்சை கிளை சிறையில் அடைக்குமாறும், வருகிற 20ம் தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.