சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள `பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன் எனப் பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். பிரவீன் கே.எல் இப்படத்தை படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகை பிரியா பவானிசங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் சிம்பு குறித்தும் படப்பிடிப்பின் அனுபவம் குறித்தும் பேசினர். அவற்றின் தொகுப்பு இங்கே…
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பிரியா பவானிசங்கர் பேசுகையில், “இயக்குநர் கிருஷ்ணா சார் ரொம்ப நேர்மையான மனிதர். ஒரு நாள் கூட செட்ல கெட்ட வார்த்தைப் பேசியோ, டென்ஷன் ஆகியோ நான் பார்த்ததே இல்லை. ஹீரோல இருந்து சின்ன கேரக்டர் பண்றவங்க வரைக்கும் எல்லாரையுமே சமமாதான் ட்ரீட் பண்ணுவார்.
ரஹ்மான் சாரோட இசைக்கு நான் ரொம்ப பெரிய ஃபேன். நான் ஆரம்பிச்சா உங்களைப் பத்தி விடாம பேசுவேன். நேரு ஸ்டேடியம்ல ரஹ்மான் சார் பாடறதைக் கேட்கணும்ன்னு ஆசைப்படுற ரசிகர்கள்ல நானும் ஒருத்தி. எனக்கும் STR-க்கும் துரதிர்ஷ்ட வசமா பெரியளவுல போர்ஷன்ஸ் இல்ல. ஆனா, அவர்கூட ஸ்க்ரீன் ஷேர் பண்ணதுக்கே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார்.
கௌதம் கார்த்திக் பேசுகையில், “‘பத்து தல’ என் வாழ்க்கையில ரொம்ப பெரிய படம். இயக்குநர் கிருஷ்ணா சார், நிறைய கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்காரு. எனக்கு இதுல முக்கியமான ரோல் கொடுத்திருக்காரு. எல்லாருக்கும் நன்றி!
ஆக்ஷன்தான் இந்தப் படத்தோட பெரிய பலம். அதுக்கு அப்பறமா நடனம். சாண்டி மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் இவங்களோட எல்லாம் வேலை செய்யும்போது ‘கடல்’ படத்தோட ஞாபகம் வந்துச்சு. நாஸ்டால்ஜியாவா இருந்துச்சு. எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக் போட்டது ‘Dream Come True Moment’ தான். இந்த ஆல்பமும் செமையா வந்திருக்கு. இப்போ கேட்கும்போதே கண்ணெல்லாம் கலங்குது” என்றவர், சிம்பு குறித்தும் பேசினார்.
“AGR ஆக நடித்த Atman STR அண்ணன், எனக்கு லண்டன்லாம் சுத்திக் காட்டிருக்காரு. அப்போ உங்களோட ‘Spiritual Journey’ பத்தி நிறையவே சொன்னீங்க. அப்போ எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா, இப்போ Transform-ஆகி வந்திருக்கீங்க. வேற லெவல் அண்ணா!
அவரோட கால், கை எல்லாமே நடிக்கும். நமக்கு ‘எப்புட்றா’ன்னு இருக்கும். AGR-ஓட பவர் பார்க்கணும்னா மார்ச் 30 பாருங்க!” என்றார்.