Elephant Death Viral Video: கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அந்த யானைகள் கடந்த மாதம் தனித் தனிக்குழுக்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன.
இதனால், விளைநிலங்களில் பயிர்களை சேதத்திற்கு உள்ளாகுகின்றன. விவசாயிகள் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துகொள்ள வயல்வெளிகளை சுற்றிலும் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வருகின்றனர். இந்த மின் வேலிகளில் சிக்கி, யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூன்று யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிந்தன. அதன் இரண்டு குட்டிகள் தாய் யானையை பிரிந்து வனப்பகுதியில் சுற்றி திரிந்தது. இதே போல் ஒரு குட்டி யானை கிணற்றில் விழுந்தது. பின்னர், அதனை உயிருடன் மீட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே ஊருக்குள் ஒற்றை ஆண் யானை புகுந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். அப்போது கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே ஏரி கரையில் ஏறும்போது, அந்த வழியாக சென்ற தாழ்வான மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை சம்பவ இடத்திலியே உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழக்கும் காட்சி.@gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @supriyasahuias @SudhaRamenIFS @ASubburajTOI @PrasanthV_93 #TNForest #Elephant pic.twitter.com/VT7cb1MjAx
— Srini Subramaniyam (@Srinietv2) March 18, 2023
இதனையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நேரடி காட்சிகள் அங்குள்ளவர்களால் செல்போனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.