மதுரை: அதிமுகவில் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகளை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி உருவாக்குவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து கே.பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வந்தநிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நபரிடம் பதவியும் அதிகாரமும் குவிந்து கிடப்பதால் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகள் உயர் பதவிகளுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை, கட்சித் தலைமை சொல்வதை தட்டாமல் கேட்கும் நிலையிலே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ராணுவக்கட்டுப்படாக இருந்தனர். ஆனால், கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் முன்பிருந்த கட்டுப்பாடு தற்போது இல்லை. இவ்வளவுக்கும் கே.பழனிசாமி 4 ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து முதல்வராகவும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி உள்ளார். ஜெயலலிதா கூட, கே.பழனிசாமி போல் எடுத்த எடுப்பிலே முதல்வராக வரவில்லை. எதிர்கட்சித் தலைவராக இருந்த பிறகே முதல்வரானார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகும் அதிமுக, தற்போது போல் மிகப்பெரிய பிளவை சந்தித்தது. ஆனால், ஜெயலலிதா தைரியமாக கட்சித் தலைமை பொறுப்புகளில் மட்டுமில்லாது ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனக்கு எதிரான சீனியர் நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார். அதனால், மாவட்டங்கள் தோறும் புதியவர்கள் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளாகவும் வர முடிந்தது.
ஆர்.எம்.வீரப்பன், கண்ணப்பன், எஸ்டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்ற முக்கிய நிர்வாகிகள் பலரை நீக்கியப்பிறகு கட்சி கட்டுப்பாட்டுடன் மேலும் வலிமைப்பெற்றது. அதோடு அடிக்கடி மாவட்டச் செயலாளர்களையும், அமைச்சர்களையும் மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி நிர்வாகிகளை உருவாக்கி கட்சியை சீரமைத்து புத்துணர்ச்சியாக வைத்திருந்தார். அதனால், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்கள் பெருமளவு அதிமுகவிற்கு வரத்தொடங்கினர். அதிமுகவை ஜெயலலிதா தேசிய அளவில் கவனம் பெற வைத்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்து கட்சியின் மூன்றாம் தலைமுறை தலைவரான கே.பழனிசாமி தற்போது தலைவராக வந்துவிட்டார். ஆனால், அவரை போல் மாவட்ட அளவில் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகளால் கட்சிப் பொறுப்புகளுக்கு வர முடிவதில்லை. ஜெயலலிதாவால் கடைசியாக நியமிக்கப்பட்ட பழைய நிர்வாகிகளே மாவட்டங்களில் தற்போதும் மாவட்டச் செயலாளராகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர். மாவட்டச் செயலாளராக இருப்பவர்களே முன்னாள் அமைச்சர்களாகவும், எம்எல்ஏவாகவும், கட்சியின் மாநில பொறுப்புகளிலும் உள்ளனர். உதாரணமாக மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகர மாவட்டச் செயலாளராக 20 ஆண்டிற்கும் மேலாக உள்ளார்.
அவரே கட்சியின் மாநில அமைப்பு செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளார். அதுபோல், முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், எம்எல்ஏவாகவும், மாநில ஜெ., பேரவை செயலாளராகவும் இருப்பதோடு தற்போது எதிர்கட்சித் துணைத்தலைவராகவும் கே.பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதுபோல், விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவாகவும், மாநில அமைப்பு செயலாளராகவும், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். ஜெயலலிதா காலத்தைபோல் மாவட்டச் செயலாளராகவும், மாவட்ட பொறுப்புகளிலும் புதியவர்கள் வர முடியவில்லை.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு வந்த திண்டுக்கல் சி.சீனிவாசன், தற்போதும் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் பொருளாளராகவும் உள்ளார். அதுபோல், நத்தம் ஆர்.விஸ்வநாதன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் துணைப்பொதுச் செயலாளராகவும் உள்ளார். இதுபோல், பெரும்பாலான மாவட்டங்களில் ஜெயலலிதா காலத்தில் நியமிக்கப்பட்ட பழைய நிர்வாகிகளே மாவட்ட செயலாளராகவும், கட்சியின் மற்ற பொறுப்புகளிலும் நீடிக்கிறார்கள். இவர்களிடம் இருந்து ஒரு பதவியை பறித்தாலே அவர்கள் மாற்று அணிக்கு சென்றுவிடுவார்களோ என்ற தயக்கத்தில் கே.பழனிசாமி புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது.
அதனால், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைப்போல் இளைஞர்கள் அதிமுகவிற்கு தற்போது வருவதில்லை. திமுகவிலும், அதிமுகவை போல் அந்தந்த மாவட்டத்திலுள்ள ஒரே நபரிடம் காலம், காலமாக அதிகாரமும், பதவியும் குவிந்து கிடந்தாலும் அக்கட்சி ஆளும்கட்சியாக இருப்பதால் அக்கட்சிக்கு இளைஞர்கள் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். திமுகவையும் பிடிக்காதவர்கள் மட்டுமே நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு செல்கின்றனர். உடனடியாக கே.பழனிசாமி, கட்சியில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ”தற்போதுள்ள சூழலில் நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சரியான நடவடிக்கையாக அமையாது, ஜெயலலிதா போல் கட்சியின் பொதுச்செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சியை கண்டிப்பாக மறுசீரமைப்பு செய்வார்” என்றனர்.