சென்னை: அதிமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி பழனிசாமி உருவப்படம் எரிப்பு வரை நீண்டது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘‘கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் எனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்’’ என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.
இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசியல் கட்சிகள் நல்லிணக்கத்தோடு இருந்த நிலையை மாற்றி, வார் ரூம் நடத்தி, சொந்த கட்சிக்காரர்களையே கொச்சைப்படுத்துவது பாஜகவில் இந்த காலகட்டத்தில் தான் உருவானது. அவர் எடுக்கும் முடிவு நல்ல முடிவுதான். அன்புடன் வரவேற்கிறோம்’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் முடிவு செய்யும். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும், கூட்டணியை வழிநடத்தும்’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறும்போது, ‘‘பாஜகவின் கொள்கை வடநாட்டு அரசியலை, இந்தி வெறியர்களை ஊக்குவிப்பது. திராவிடர் கொள்கை, தமிழ்நாட்டு மக்கள், மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது. இரு கட்சிகளின் கொள்கைகள் வேறு. இன்றைய நிலையில் கூட்டணி தொடர்கிறது’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியோடு தான் கூட்டணி வைக்கப்படும். குட்ட, குட்ட குனியும் ஆள் நாங்கள் கிடையாது. எங்களை யாரும் குட்டவும் விடமாட்டோம். நாங்கள் குனியவும் மாட்டோம்’’ என்றார்.
பெயர் சொல்ல விரும்பாத கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘மடியில் கனம் இல்லாத நிர்வாகிகள் பாஜக உடனான கூட்டணியை ஏற்கவில்லை. மத்திய முகமைகளின் வழக்கை எதிர்கொள்வோரின் நிர்பந்தத்தால் பழனிசாமி வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
நேற்று கட்சி பொறுப்புக்கு வந்தவர்களெல்லாம் அதிமுகவை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பழனிசாமி அமைதி காப்பதை ஏற்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து, சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததால் தான் ஆட்சியையும் இழந்து நிற்கிறோம். பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் பழனிசாமி துணிவுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
காவல் ஆணையரிடம் மனு: இதற்கிடையே, அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.