அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் மூலம் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கிலும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இப்படியான சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில், `பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும்’ என அறிவிப்பு வெளியானது. எடப்பாடி பழனிசாமியும் இதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, உடனடியாக இந்தத் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு அவசர வழக்கு தொடுத்தது.
இந்த நிலையில், விடுமுறை தினம் என்றபோதிலும் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்புகள் தங்களது வாதங்களை முன்வைத்தன.
இறுதியில் நீதிபதி குமரேஷ் பாபு, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக் கூடாது” என உத்தரவிட்டார். அதோடு, “ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கு மார்ச் 22-ம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.