தஞ்சாவூர்: அரசு பொதுத்தேர்வு எழுத மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சாவூரில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 3 நாட்கள் பள்ளிக்கூடம் வந்தால் ஹால் டிக்கெட் தரப்படும் என்று நான் கூறவில்லை. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. 3 நாள் பள்ளிக்கூடம் வந்தால் ஹால்டிக்கெட் என்பது தவறான செய்தி.
கல்வி ஆண்டில் 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொதுத்தேர்வு எழுத ஹால்டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய கல்வி ஆண்டிலும் இதே முறை பின்பற்றப்படும். மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத பயப்படக்கூடாது. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் என்று முதல்வரே அறிவுறுத்தியுள்ளார். பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களின் பெற்றோர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிந்து வருகின்றனர். இனி வரக்கூடிய தேர்வுகளை கண்டிப்பாக எழுத அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறினார்.