அரியலூர்: அரியலூர் அருகே கண்டெய்னர் லாரியும், மீன்பாடி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு (மார்ச் 18) 11 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து அரியலூரை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அப்போது அரியலூரிலிருந்து தஞ்சாவூரை நோக்கி ஆந்திராவிலிருந்து மீன்பாடி லாரி ஒன்று எதிரே வந்துள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த முடிகொண்டான் அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் அருகேயுள்ள வாய்க்காலில் மீன்பாடி லாரி கவிழ்ந்தது. இதில், லாரியில் அமர்ந்திருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் கொண்டிபாளையத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா மகன் ரமேஷ் பித்தாணி(45) என்பவர் வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருமானூர் போலீஸார், பொதுமக்கள் உதவியுடன், விபத்தில் படுகாயமடைந்த மீன்பாடி லாரி ஓட்டுநர் நெல்லூர் கொண்டியபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலு மகன் பமன்ஜிராஜாவை(35), 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பமன்ஜிராஜா உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் காட்ராம்பாக்கம் சுந்தரம் மகன் சுரேஷ்(38), உடன் வந்த திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், காமராஜர் காலனி தெருவை சேர்ந்த அப்துல்வாகப் மகன் முகமது இப்ராஹிம்(40) ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.