28 வயதான பிரதிக் விட்டல் மொஹிதே என்பவர், 3 அடி 4 இன்ச் உயரமுடையவர். இவர் `உலகின் குள்ளமான பாடிபில்டர்’ என்ற கின்னஸ் சாதனையை 2021-ம் ஆண்டில் படைத்திருக்கிறார்.
சமீபத்தில், இவர் 22 வயதான 4 அடி 2 இன்ச் உயரமுடைய ஜெயா என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தன் திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் பிரதிக்.
அதில், “அந்த ஒருவர் ஜெயா தான் என்று எனக்குத் தெரியும்… ஜெயாவை நான் பார்த்த தருணத்தில் எனக்குப் பிடித்திருந்தது. அவர் என்னை விரும்பினார் என நினைக்கிறேன். அவர் என்னுடைய உடலமைப்பால் ஈர்க்கப்பட்டார்.
என்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல வாழ்வினை வழங்க முதலில் ஒரு வேலையைப் பெற விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2012ல் தனது பாடிபில்டர் கனவை நோக்கி நகர்ந்த பிரதிக் விட்டல் மொஹிதே, அதனை 2021ல் சாதித்துக் காட்டினார். அப்போது, `’கின்னஸ் உலக சாதனை பட்டத்தை அடைவது எனது கனவாக இருந்தது, அதை அடைவது மிகவும் பெருமையாக இருக்கிறது. இது வாழ்க்கையில் எனது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்’’ என்று மகிழ்ச்சியில் கூறியிருந்தார்.