ஒரு மனிதன் தன்னிறைவான வாழ்க்கை பெற கல்வி மிகவும் முக்கியமானது. ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என அறிஞர் விக்டர் ஹியூகோ கூறி உள்ளார். ஆம்… உலகளாவிய அதிசயங்களை, தேடிச் சென்றாலும் தெரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற விஷயங்களை நம் கைகளில் தவழச் செய்து, சிந்தனைகளை வளர்க்கும் சிறந்த இடம்தான் நூலகம். அந்த வகையில் தென் மாவட்டங்களின் தலைநகராம் மதுரைக்கு மணி மகுடமாக திகழ உள்ளது 7 தளங்கள், எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலக தரத்தில் உருவாகியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. வாருங்கள்… முதல்கட்டமாக வாசிப்பின் வழியாகவே அதன் தனிச்சிறப்புகளை அறிவோம்.
முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, கடந்த 2010ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா 102வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். தமிழர்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிய கலைஞரின் நினைவை போற்றும் வகையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021, ஜூன் 3ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, மதுரை, புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வானது.
இங்கு 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டிட பரப்பளவில், 7 தளங்களுடன் நவீன வசதிகளுடன் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டவும், நூலக கட்டமைப்புக்கு ரூ.99 கோடி, நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடி, கம்ப்யூட்டர், தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 கோடி என மொத்தம் ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஐஎஸ்ஐ தரத்துடன்… 2022, ஜன. 11ம் தேதி சென்னையில் இருந்தவாறு, காணொலி மூலம் நூலக கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து கட்டுமானப் பணிகள் வேகமெடுத்தன. நூலக இடத்தை தேர்வு செய்தும், கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை நேரில் வந்தும் ஆய்வு செய்தார். பணியில் ஐஎஸ்ஐ தரமுள்ள சிமென்ட், மண், கம்பி, ஜல்லி உள்ளிட்ட பொருட்களே பயன்படுத்தப்பட்டன. கட்டுமான பணிகள் கடந்த செப்டம்பர் மாதமே நிறைவடைந்தது. அதன்பின் மின்சாரம், ஏ.சி, அரங்க அலங்காரங்கள், வண்ணம் தீட்டுதல் உட்பட உள்கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
குளுகுளுவென படிக்கலாம்…
நூலகத்தில் நான்கு வழிகள் உள்ளன. கட்டிடக் கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டிட வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகள் முடிந்து, ஜெர்மன் கண்ணாடி சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது. 3 மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்புத் தோற்றம் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நூலகத்தில் 6 லிப்ட் வசதிகள், 4 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நூலகம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
தொட்டால் புத்தகம் மலரும்…
நூலகத்திற்கு சென்று நமக்கு தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க விரும்பினால், அதற்காக கணினியில் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நமக்கு தேவையான நூல் தலைப்பை குறிப்பிட்டால் எந்த மாடியில், எந்த இடத்தில் புத்தகம் உள்ளது என்பதை காண்பித்து விடும். வைஃபை வசதியும் உள்ளது. நூலகத்தில் படித்ததை பிரதி எடுக்க ஜெராக்ஸ் மெஷின் வசதி, அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் பயன்பாட்டுக்காக ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவு
நூலக தரைத்தளத்தில் (32,656 சதுரஅடி) கலைக்களஞ்சியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, 700 பேர் அமரும் வகையில் மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு அமைய உள்ளது.
* அரும்பெருந்தலைவர்களின் அற்புத புத்தகங்கள் அணிவகுப்பு
நூலக தமிழ் பிரிவில், பழந்தமிழ் இலக்கியங்கள், உரைகள் மற்றும் திறனாய்வு நூல்கள். நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு, பண்பாட்டு இலக்கியங்கள், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற உலக தமிழ் இலக்கியங்கள். மொழியியல். இலக்கணங்கள் மற்றும் உரைகள். கவிதை, நாடகம், புனைவு மற்றும் கடிதங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், நாட்டுடமை நூல்கள், பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் நூல்களும் மற்றும் திராவிட இயக்க அறிஞர்கள், தலைவர்களின் எழுத்துகள். பொதுவுடமை நூல்கள், தலித்தியம், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் மற்றும் அறிஞர்களின் அரிய நூல்கள் இடம் பெறுகின்றன.
* நல்லறிவு தரும் 4,30,400 நூல்கள்
கலைஞர் அரங்கில் 5 ஆயிரத்து 400 நூல்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 6 ஆயிரம் நூல்கள், குழந்தைகள் பிரிவில் 60 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல் வழங்கும் பிரிவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல்கள் குறிப்புப் பகுதியில் (Tamil Reference Section) 50 ஆயிரம் நூல்கள், ஆங்கில நூல் வழங்கும் பிரிவில் 50 ஆயிரம் நூல்கள், ஆங்கில நூல் குறிப்பு பிரிவு 50 ஆயிரம் நூல்கள். போட்டித் தேர்வு பிரிவு 45 ஆயிரம் நூல்கள். அரிய நூல்கள் பிரிவில் 14 ஆயிரம் நூல்கள் என மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 400 நூல்கள் இடம் பெற உள்ளன.
* பார்த்து, பார்த்து செதுக்கிய பல மாநில கட்டுமானங்கள்
நூலகத்தின் முகப்பு பகுதி ஆரோ வளைவு வடிவ கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. அதிலும், நூலகத்தின் முன் தோரணவாயில் இணைத்து கட்டப்பட்ட சுவரில் சிவப்பு நிற செங்கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் பெங்களூர் அருகே தொப்பலூரில் இருந்து பிரத்யேகமாக தயாரித்து கொண்டு வரப்பட்டது. முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்ட ஒடுகள், கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள கிராமத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. சுவரை அரைசுற்று வட்ட வடிவில் கட்டவும், இந்த கல் பதிக்கும் பணியில், புதுச்சேரி ஆரோவில் கட்டிட கலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
* நூலகத்தில் நவீன முற்றம்
நூலகத்தில் கட்டிடத்தின் நடுப்பகுதியுடன் முன்பகுதியை இணைத்து 98 அடி அகலம், 68 அடி உயரத்தில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப்பேழையிலான கூடாரம் மேற்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பேழையானது சூரிய வெப்பம், மழை ஈரத்தை தாங்குமா என்பதற்காக 28 டிகிரி வெப்பம், குளிர் நீர் என 48 மணி நேரத்திற்கு ‘ஈஷோக் டெஸ்ட்’ என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையால் கண்ணாடியில் கீறல், வெடிப்பு போன்றவை ஏற்படாது. முற்றத்தின் நடுவில் 20 அடியில் ‘அலங்கார வண்ண சரவிளக்கு’ தொங்க விடப்பட்டுள்ளது.
* முதல்வர் விருப்பத்திற்காக மாநாட்டு அரங்கம் விரிவு
நூலகத்தின் தரைத்தளத்தில் 250 பேர் அமரும் வகையில் 54 அடிக்கு 40 அடியில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டது. கலைஞர் நூலகத்தை சமீபத்தில் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இதை அதிக பேர் அமரும் வகையில் விரிவுபடுத்துமாறு ஆலோசனை கூறினார். இதையடுத்து 108 அடி நீளம், 45 அடி அகலத்தில் சுமார் 700 பேர் அமரும் வகையில் மாநாட்டு உள் அரங்கமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
* குட்டீஸ்களையும் குஷியாக்கும் டோரா
முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில், 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒளி, ஒலி காட்சிகள், சோட்டா பீம், டோரா புஜ்ஜி, டாம் அண்ட் ஜெர்ரி உள்ளிட்ட வண்ண பொம்மைகள், ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அரங்கில் குழந்தைகள் நடக்கும்போது, பறவைகள், பூச்சிகள் பறப்பது போன்ற செயற்கை கார்ட்டூன்கள் திரையும் அமைக்கப்பட்டு, இந்த அரங்கும் முற்றிலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், அதே நேரம் அவர்கள் வாசிப்பு திறன் மேம்படுத்தும் விதத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது.