புதுக்கோட்டை: ஆளும் கட்சியினர்தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் அந்தந்த மாநிலங்களுக்குள் உள்ள அரசியல் சூழலுக்காக சில மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியோடு இணையாமல் இருக்கலாம். ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதுதான் சரியானது.
தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு போன்ற ஆதாய நோக்கத்திலான குற்றச் செயல்கள்தான் நடந்து வருகின்றனவே தவிர, அரசியல் மோதல், ஜாதிய மோதல்களை தூண்டும் வகையிலான சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை. திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா வீட்டில் நடந்த மோதல் குறித்து அவர்களே விளக்கம் கொடுத்துவிட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறக் கோருவது தமிழகத்தில் உணர்வுப்பூர்வ பிரச்சினையாக மாறிவிட்டது. அவ்வாறு பார்க்கக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டத்தை மாநிலத்துக்கு மாநிலம் தடை செய்வதால் பயனில்லை. அதை தேசிய அளவில் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்துக்குப் பண பரிவர்த்தனை போன்றவற்றில் வேண்டுமென்றால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தமிழ் பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து கல்வித் துறை அமைச்சர் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமைக்கு யாரை நியமித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை என்னை நியமித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி வைக்கும் வரை அதிமுகவையும் மக்கள் புறக்கணிப்பார்கள். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை. ஆளும் கட்சியினர்தான் முடக்கி வருகிறார்கள். பிரதமர் அலுவலக செயலர் எனக் கூறிக்கொண்டு குஜராத்தைச் சேர்ந்த கிரண் பாய் படேல் என்பவர் 6 மாதங்களாக காஷ்மீரில் உயர் பாதுகாப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு வசதிகளைப் பெற்று ஊர் ஊராக சுற்றி இருக்கிறார். மோசடியான நபருக்கு மத்திய அரசு எப்படி பாதுகாப்பு வழங்கியது? என நாடாளுமன்றத்தில் நாளை கேள்வி எழுப்ப உள்ளோம்” என்றார்.