நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குஜராத் மாநில நீர்வளத்துறை அமைச்சர் குன்வார்ஜி பவாலியா, குஜராத் மாநில கூட்டுறவுத்துறை ஜகதீஷ் விவகர்மா ஆகியோர் பங்கேற்றனர். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்திற்கான அறிவிப்புகள் மற்றும் அதற்கான இணையதளத்தையும் மத்திய அமைச்சர் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
எப்போது நடைபெறுகிறது ‘சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’?
தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரா தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு, ‘சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உ.பி.யின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது, அதுபோன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நடைபெற உள்ளது. ஏப்ரல் 14 முதல் 24-ம் தேதி வரையில் 10 நாட்களுக்கு சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்ற முறை ஐஐடி.. இந்த முறை என்.ஐ.டி
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த முறை சென்னை ஐ.ஐ.டி செய்திருந்தது, குஜராத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை இந்த முறை திருச்சி என்.ஐ.டி நிர்வாகம் மேற்கொள்கிறது. நிகழ்ச்சிக்குப் பின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டியளித்தார்.
3000 பேரை அழைத்துச் செல்ல திட்டம்!
அப்போது, “மத்திய அரசும் – குஜராத் அரசும் இணைந்து நடத்தும் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்யலாம். அதில் 3000 பேரை தேர்ந்தெடுத்து எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அழைத்துச் செல்வோம்” என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
”நீட் தேர்வு விலக்கு குறித்த கேள்வி இங்கு வேண்டாமே”
தமிழ்நாடு நீட் தேர்வு ரத்து மசோதாவின் நிலை என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது எனவும், இது சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி என்றும், இது தொடர்பான கேள்விகளை கேட்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM