காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். அதில், ராகுல் பேசிய கருத்துகள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதாக பா.ஜ.க தரப்பில் கூறப்படுவதோடு, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய ஜனநாயகத்தின் வெற்றி சிலரைக் காயப்படுத்துகிறது என ராகுல் காந்தியை, பிரதமர் மோடி மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.
பிரபல தனியார் ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் நேற்று பேசிய மோடி, “முழு நாடும் உறுதியுடனும், உலக அறிவாளிகள் அனைவரும் இந்தியாமீது நம்பிக்கையுடனும் இருக்கும்போது, நாட்டை மோசமாகக் காட்டுவது, நாட்டின் மன உறுதியைக் காயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளின் வெற்றி சிலரைக் காயப்படுத்துகிறது, அதனால்தான் அவர்கள் அதைத் தாக்குகிறார்கள். ஆனால், இதுபோன்ற தாக்குதல்கள் என்ன நடந்தாலும், நாடு தனது இலக்குகளை அடையும் வகையில் முன்னேறிக்கொண்டே இருக்கும்” என்று கூறினார்.