சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் விழாவின் நாயகனான பத்து தல படத்துக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் என பலரும் பங்கேற்றிருந்தார்கள். இந்த படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
விழாவின் போது நடிகர் சிம்பு ரசிகர்கள் முன்பு பேசியது எந்த அளவுக்கு அளவுக்கு வைரலானதோ அதற்கு சற்றும் சளைத்ததில்ல என்பது போல ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதும் இதனூடே ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில், “பத்து தல படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணமே சிம்புதான். அதுக்கப்புறம் இயக்குநர் கிருஷ்ணா. அவருக்கு இசை மீது தனித்துவமான அபிப்பிராயம் இருக்கும். என்னுடைய இசை வாழ்க்கையிலேயே எல்லாருக்கும் பிடித்தமானதில் ஒன்று முன்பே வா பாடல். அந்த பாடலுக்கான ட்யூன் கொடுக்கும் போது இது ரொம்ப சோகமா இருக்கேனு நான் சொன்னேன்.
அதுக்கு, இல்ல இந்த பாட்டு பயங்கரமா ஹிட் ஆகும்னு கிருஷ்ணா சொன்னார். அதே மாதிரி 2 தசாப்தங்களாகியும் கொடிக்கட்டி பறந்துட்டு இருக்கு முன்பே பாடல். இந்த நம்ம சத்தம் பாட்டை பாட வேண்டியது சிம்புதான். ஆனா அவர் ஊர்ல இல்லை. தாய்லாந்துல இருந்தார். இந்த பாட்டை பாடும் சமயத்துலதான் அவர் ஃப்ளைட் ஏறிட்டார். அப்றம் நான் பாட வேண்டியதா போச்சு.” என பேசியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தன்னுடைய பேச்சை முடித்த பிறகு சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் வகையில் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான “The Light Man Group” -ஐ ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் சிம்பு திறந்து வைத்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும் செல்ஃபி ஃபோட்டோ எடுத்துக் கொண்டதும் சமூக வலைதளங்கள் படு வைரலாகி வருகிறது.