இனி ரசிகர்களை தலை குனிய விடமாட்டேன்: சிம்பு பேச்சு
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'பத்து தல'. மார்ச் 30ல் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு பேசியதாவது: நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும்.
இந்தப் படத்தை கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் கவுதம் தான். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு உண்டு. ஏனென்றால் இங்க தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.
எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். கவுதம் கார்த்திக் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகளை சந்தித்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதோ இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கவுதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
ஏஆர் ரஹ்மான் சார் என் காட்பாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன். ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்துள்ளார். எல்லோரும் என்னிடம், 'முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். அதுக்கு ஒரு காரணம் உள்ளது.
முன்பெல்லாம் 'நான் யாருனு தெரியுமாடானு' என்ற அளவுக்கு பேசியிருக்கேன். ஒப்புக்கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள். அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால் தான் அதுபோன்ற கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள். அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்து தான் பேச முடியும்.
இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.