‘இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான்’ – சீமான் பேச்சு

“தமிழ்நாட்டில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை; இதுபோன்ற ஒரு கேவலம், அவமானம் எந்த நாட்டில் நடைப்பெற்றுள்ளது?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் “தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா” நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், “முன்னதாகவே இந்த பாசறை தொடங்கியிருக்க வேண்டும்; ஆனால் தற்பொழுதுதான் தொடங்கி இருக்கிறோம். பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்தப்பிறகுதான், தேடி தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது.
திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டுகாலப் போராட்டம், சிறையிலிருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல. சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி, வரும் 23 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
image
ஆன்லைன் சூதாட்ட தடையில் அரசுக்கு என்ன திறன் உள்ளது? அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது; அதனை செயலாக்கம் செய்ய வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதில் இங்கு பிரச்சனை இல்லை. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். அது தான் முக்கியம்” என்று கூறினார்.
ஆதன் சேனல் மாதேஷிடம், சீமான் பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ தொடர்பான கேள்விக்கு, “தேர்தல் நேரங்களில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் எங்களை விளம்பரம் செய்கிறோம். சில தனியார் தொலைக்காட்சிகளில் பணம் செலுத்தி, எங்களது மேடைப்பேச்சுகளை நேரலையில் போட சொல்வோம். பல இடங்களில் 12 லட்சம், 10 லட்சம் கேட்டதால் எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறைந்த கட்டணத்திற்கு செய்வதாக கூறினார்கள்; அதனால் சென்றோம். கருத்துக்கணிப்பை எனக்கு சாதகமாக செய்ய சொல்லக் கூடிய ஆள் நான் கிடையாது; ஏதாவது பைத்தியக்காரன் அப்படி சொல்லிக் கொண்டிருப்பான்” என ஆவேசமாக தெரிவித்தார்.
image
மேலும், பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு, திமுகவின் ஓட்டை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீமான், “நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை; நாட்டை பிரிக்க வந்த ஆள்… நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். அதற்காக நான் திமுகவின் பி டீம் ஆக ஆகிவிடுவேனா? அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன்” என சர்ச்சையாக பதிலளித்தார்.
ஆதன் தமிழ் சேனலுக்கு மீண்டும் பேட்டி தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் பேட்டி தருவேன். ஊடகம் ஒரு முறை விமர்சிக்கும்; ஒருமுறை பாராட்டும். அதையெல்லாம் பெரிதுப்படுத்த கூடாது. கலைஞர் டிவி பெட்டி கேட்டால் கூட நான் தருவேன். எல்லோரையும் போராட்டத்தில் இறக்கி விட்டு விட்டு நாங்கள் நல்லாட்சி கொடுக்கிறோம் என வீண் பேச்சு பேசிக் கொண்டு இருக்ககூடாது. தமிழ் நாட்டில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. இதுபோன்ற ஒரு கேவலம், அவமானம் எந்த நாட்டில் நடைபெற்றுள்ளது?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, “அரசு இதன் மீது கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் நேரங்களில் அளித்த அனைத்தும் வெற்று வாக்குறுதி” என கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.