எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல… – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு கருத்துரைகள் தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சரால் 14.03.2023 அன்று தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக அங்கக வேளாண்மைக்கு என்று எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில், அதன் தேவையை அறிந்து, மக்களின் உடல் நலத்தை பேணிக் காக்கவும், மண்வளம், இயற்கை வளத்தை காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை நமது மாநிலத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியிடப்பட்டது.

இந்த அங்கக வேளாண்மைக் கொள்கையினை தயாரிப்பதற்காக, பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு, குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு அங்கக வேளாண்மையின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து, வரைவு அங்கக வேளாண்மைக் கொள்கையினை அரசுக்கு வழங்கியது.

தொடர்ந்து, இந்த வரைவு அங்கக வேளாண்மைக் கொள்கையினை மேலும் செம்மைப்படுத்துவதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில், ஆராய்ச்சியாளர்கள், பல் துறை அலுவலர்கள், இயற்கை வேளாண் ஆர்வலர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்களோடு, இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் கிடைத்த கருத்துக்களை எல்லாம் பரிசீலித்து, அக்கூட்டங்களில் தெரிவித்த முக்கியக் கூறுகளையும் சேர்த்து, அங்கக வேளாண்மைக் கொள்கையினை தயாரித்து, வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்ட பிறகு, விவசாயிகளிடமிருந்தும், அங்கக வேளாண் ஆர்வலர்களிடமிருந்தும் அரசின் கொள்கையினை பாராட்டியும், மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து, விமர்சனங்களும், திறனாய்வுகளும் வரத் தொடங்கியுள்ளன.

அங்கக வேளாண்மைக் கொள்கையில் அதன் தேவை, நோக்கங்கள், நன்மைகள், அதற்கான உத்திகள், தகவல் பரிமாற்றம், சந்தைப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அங்கக வேளாண்மைக் கொள்கையினை, கிராமப்புற விவசாயிகள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. அங்கக வேளாண்மைக் கொள்கை

என்பது, வழிகாட்டும் வகையிலும், அரசின் நோக்கத்தை சொல்லும் வகையிலும், பரந்த அளவிலான (Broad spectrum) ஒரு கொள்கை குறிப்பாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்ட மூன்று நாட்களுக்குள், இதன் சாராம்சம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று, அங்கக

வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து நல்ல திறனாய்வு கருத்துக்களை பெற்று வருகிறது. இதுவே அங்கக வேளாண்மையினை நமது மாநிலத்தில் பரவலாக்குவதற்கு அரசு கொண்டு வந்துள்ள இந்த கொள்கைக்கு கிடைத்த உரமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கான அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்டதோடு நின்றுவிடாமல், இக்கொள்கையில் கூறப்பட்ட அம்சங்களை படிப்படியாக நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தந்து, பல்வேறு திட்டக்கூறுகளை உள்ளடக்கி, அதற்கான திட்டங்களையும் வகுத்து கொடுத்துள்ளார்கள்.

எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல. மாற்றத்திற்குட்பட்டதே. எனவே, இக்கொள்கை தொடர்பாக எழுந்துள்ள திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துக்களை ஆராய்ந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, புதிய பொருண்மைகளை சேர்த்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.