சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அவர் தெரிவித்தது..
“என்னுடைய எண்ண ஓட்டங்கள் சிலவற்றை நான் எனது மனதில் வைத்துள்ளேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நேர்மையான தூய அரசியலை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம். பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது தான் அதன் அச்சாரம். தமிழக அரசியல் களத்தில் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியாத சூழல் உள்ளது. எனக்கு அதில் தனிமனிதனாகவும், பாஜகவின் மாநில தலைவராகவும் அறவே உடன்பாடு இல்லை.
அதே போல மாற்று அரசியலை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம். அது தேர்தல் பிரச்சாரம் தொடங்கி அனைத்தும் சேரும். அதன் மூலம் நாங்கள் மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்த விரும்புகிறோம். அது சார்ந்து எங்கள் கட்சி தலைவர்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். அதில் நான் உறுதியாக உள்ளேன். எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட முடியாது. அது அவர்களின் நிலைப்பாடு.
இரண்டு ஆண்டு காலமாக பாஜக மாநில தலைவராக பணியாற்றி உள்ளேன். இந்த நேரத்தில் பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்துக்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்காத சூழலை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். நேர்மையான முறையில் மக்களை முறையிட்டு வாக்குகள் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதில் நான் உறுதியாக உள்ளேன். எங்களது நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை.
அரசியலுக்கு வந்த காலத்தில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டேன். தேர்தல் யுக்தி குறித்து அறியாத நேரம் அது. நான் எனது பணி காலத்தில் சேகரித்த பணத்தை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட போது செலவு செய்து விட்டேன். சிறுக சிறுக சேகரித்த பணம் அது. தேர்தலுக்கு பிறகு நான் கடனாளி ஆனேன்.
இந்த இரண்டு ஆண்டு கால அரசியல் சூழலை நான் கூர்மையாக கவனித்துள்ளேன். நேர்மையான, நாணயமான, பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது சார்ந்து எங்கள் கட்சியில் நான் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைவர்கள் முடிவு செய்வார்கள். எனக்கு கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் இல்லை. அதற்கான நேரம் வெகுவிரைவில் வரும். மாற்றத்தை உருவாக்க வேண்டி பொதுவாழ்வுக்கு வந்துள்ளேன்.
தமிழக அரசியல் களத்தில் பாராளுமன்ற தேர்தல் என்றால் 80 கோடி முதல் 120 கோடி ரூபாய் வரையில் பணம் செலவு செய்ய வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை நான் உதாரணமாக சொல்கிறேன். இதை செய்துவிட்டு யாருக்கும் இங்கு நேர்மையான அரசியல் செய்கிறோம் என பேச முடியாது. அதற்கான உரிமையும், தகுதியையும் இழக்கிறோம். நேர்மையான அரசியலுக்கு உள்ள வாக்கு வங்கியை நாங்கள் அணுகுகிறோம். ஓட்டுக்கு பணம் கொடுக்காத வேட்பாளரை முன்நிறுத்த உள்ளோம். இது குறித்து எங்கள் கட்சி தலைவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழக அரசியல் கள சூழலை தெளிவாக சொல்லி வருகிறேன்.
அண்ணாமலை பேசுவதை 50 பேர் சரி என்கிறார்கள். 50 பேர் தவறு என்கிறார்கள். எந்த கட்சியையும் நான் குறை கூறவில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.