கோவை மாவட்டம், கவுண்டர்மில்ஸ் பகுதியில், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூயிரின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறைத் தலைவராக மதன் சங்கர் என்பவர் பணியாற்றிவருகிறார்.
இவர், ஆய்வு மாணவர் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட மாணவர், “இவரிடம் பி.ஹெச்டி பதிவுசெய்ததிலிருந்தே சாதி, மதரீதியான தொல்லைகள் கொடுத்து வந்தார். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு படித்துவந்தேன். ஆனால், தனிமையில் இருக்கும்போது தொடர்ந்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார். இவரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல், கடந்த 12-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்திலும், கல்லூரி ஐ.சி.சி கமிட்டியிடமும் புகார் கொடுத்தேன்.
நான் புகார் கொடுத்த தகவலறிந்த மதன் சங்கர் என்னைத் தொடர்புகொண்டு, புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டினார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்தப் புகார் தொடர்பாக ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்தியது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நான் இந்தப் புகார் கொடுத்தவுடன் இதற்கு முன்பு இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரும் மதன் சங்கரால் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இவரால் பாதிப்புக்குள்ளான மாணவர் ஒருவர் இந்திய மாணவர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறினார். இதற்கு மேல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் என்னுடைய படிப்பையும் பொருட்படுத்தாமல் புகார் கொடுத்தேன். இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்” என்றார்.
பல்கலைக்கழக விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஐ.சி.சி புகார் கமிட்டியின் தலைவரான கல்லூரி முதல்வரிடம் இது குறித்து விசாரித்தோம். “மதன் சங்கரையும், அந்த மாணவரையும் அழைத்து ஐ.சி.சி குழு முன்னிலையில் விசாரணை நடத்தினோம். மாணவர் வழங்கிய ஆதாரங்களையும், விசாரணை அறிக்கையையும் கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்திருக்கிறோம்.
தற்போது பேராசிரியர் மதன் சங்கரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை கண்டிப்பாக வழங்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக மதன் சங்கரிடம் பேச தொடர்புகொண்டபோது, பேச மறுத்துவிட்டார். அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதை பதிவிடத் தயாராக இருக்கிறோம்.