கோவையில், பணியிடத்தில் பாலினம், சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி, திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.
திருநங்கையர் இன்று பல துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். அவ்வகையில்,கோவை மாவட்டத்தில் திருநங்கை நஸ்ரியா இரண்டாம்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவர் இந்தியாவிலே இரண்டாவது திருநங்கை காவலராகப் பணியில் சேர்ந்தவர். இவர் தற்பொழுது தனது காவலர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் கடிதம் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போலீஸ் பயிற்சி முடிந்தவுடன் இரண்டு வருடங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு பாலியல் ரீதியான பிரச்னையை எதிர்கொண்டு தற்கொலை முயற்சி வரை சென்றேன். அதிலிருந்து விடுபட்டு கடந்த 2020-ம் ஆண்டு கோவை மாநகரக் காவல் பணியில் சேர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும் பாலியல் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளேன்.
சமீபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் இருந்தேன். எனக்கு இன்சார்ஜாக இருந்த ஆய்வாளர் மீனாம்பிகை, என்னுடைய பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாகப் பேசினார். இது குறித்து கோவை மாவட்ட ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அவர், ஆய்வாளர் மீனாம்பிகையை எச்சரித்தார்.
இருப்பினும், அவரின் தொந்தரவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன. எனக்கு மட்டும் பணிச்சுமையை அதிகமாகக் கொடுத்தார். இதனால் உளவியல் ரீதியான சிக்கல்கள் பலவற்றை எதிர்கொண்டேன்.
இரண்டு முறை கோவை மாவட்டக் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தான் இந்த வேலைக்கு வந்தேன். இந்தப் பிரச்னைகளால் தற்போது என்னுடைய பணியை தொடராமல், நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார்.
இது தொடர்பாக கோவை மாவட்டக் காவல் ஆணையர் பேசுகையில், “நஸ்ரியாவிடம் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கக் கூறினேன். இவர் மீது ஏற்கனவே ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவர் அளித்த புகார் தொடர்பாக வடக்குப் பகுதி துணைக் காவல் ஆணையர் சந்தீஷ் விசாரணை மேற்கொள்வார். ராஜினாமா கடிதத்தை ஏற்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும்” என்றார்.