வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: சிவப்பு ரேஷன் கார்டு விஷயத்தில் புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் முரண்டு பிடித்து வரும் ஜிப்மரின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிவப்பு ரேஷன் கார்டு என்பது ஏழைகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்த சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்க அரசு ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.
ஆனால் அரசு ஊழியர்கள் பலரும் சிவப்பு ரேஷன் கார்டுடன் நிவாரணம் பெற்று வருகின்றனர். இதனையடுத்து புதுச்சேரி அரசு ஊழியர்களின் பட்டியலை பெற்ற குடிமை பொருள் வழங்கல் துறை 20,000 பேரை சிவப்பு ரேஷன் கார்டுகளில் இருந்து துாக்கியது.
அடுத்து சிவப்பு ரேஷன் கார்டுகள் வைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் பெயர்களை நீக்கும் பணியை குடிமைப் பொருள் துறை துவக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்களின் ஆதார் எண்ணை கடிதம் எழுதி கேட்டிருந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பட்டியலை வழங்கியுள்ள நிலையில், ஜிப்மர் மட்டும் தராமல் முரண்டு பிடித்து வருகின்றது.
குடிமைப் பொருள் வழங்கல் துறை பல நினைவூட்டல் கடிதம் எழுதியும் சிவப்பு ரேஷன் கார்டுகளை நீக்க பட்டியலை தரவில்லை.
அனைத்து தொகுதிகளிலும் சிவப்பு ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஜிப்மரில் உள்ள அரசு ஊழியர்களின் பட்டியலை நீக்கினால், தகுதியான ஏழைகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை தர முடியும். ஆனால் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் ஜிப்மர் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மரின் செயல்பாடுகள் ஏற்கனவே புதுச்சேரி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் எந்த உத்தரவையும் மதிப்பதில்லை. ஒத்துழைப்பும் தருவதில்லை என அரசியல் கட்சியினரும் கொந்தளித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் சிவப்பு ரேஷன் கார்டு விஷயத்திலும் ஜிப்மர் மருத்துவமனையின் செயல்பாடு அமைந்துள்ளது. ஜிப்மரின் செயல்பாடு தொடர்பாக, குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், புதுச்சேரி அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத ஜிப்மர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement