புழல்: செங்குன்றம் அருகே கோட்டூர், கோமதி அம்மன் நகர், தர்காஸ் சக்கர கார்டன் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே, நேற்றிரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனியார் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பிய குடோனில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் மற்றும் செங்குன்றம், மணலி, செம்பியம், அம்பத்தூர், மாதவரம் பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, குடோனில் பரவியிருந்த தீயை வீரர்கள் முற்றிலுமாக அணைத்தனர். இதனால் அக்கம்பக்கத்து வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் தென்னரசு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். இதில், அந்த குடோனில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானதாகத் தெரியவந்தது.
இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா, மர்ம கும்பலின் கைவரிசையா அல்லது தொழில் போட்டி காரணமாக நாசவேலையா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.