`தடக்’ படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஜான்வி கபூர். கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட்லக் ஜெர்ரி, மிலி எனத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது இவர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி என்கிற இந்திப் படம் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாகவே நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார் எனத் தகவல் பரவி வந்தது.
அதிலும் குறிப்பாக லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள பையா 2 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று அவரின் தந்தை போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ள தெலுங்கு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதைப் படக்குழுவும் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றுவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ அவருடன் நடிக்கபோகும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிவது ஒரு கனவாக இருந்தது. நான் சமீபத்தில் ‘RRR’ படத்தை மீண்டும் பார்த்தேன்.
அவருடன் படத்தில் இணைந்து நடிப்பது என் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு பேட்டியிலும் அவருடன் கண்டிப்பாக இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று சொல்வேன். அதுமட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை எல்லாம் கூட செய்திருக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.