பாஜகவில் மோதல்
தமிழக பாஜகவில் இப்போது நிலைமை சரியில்லை. அண்ணாமலைக்கு எதிராக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஒரு பெருங்கூட்டமே அணி திரண்டிருக்கிறது. வேவு பார்ப்பது, மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, கட்சி நடவடிக்கைகளில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது என்பது உள்ளிட்ட புகார்கள் அண்ணாமலை மீது வட்டமடிக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. மாறாக, தனக்கு எதிராக கட்சிக்குள் இருப்பவர்களை அமைதியாக ஓரங்கட்டுவதில் பக்காவாக பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு
இந்தநிலையில் தான் அண்ணாமலைக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை, தமிழக பாஜக தனித்து தேர்தலில் போட்டியிடும். இதற்கு மாறாக கட்சி மேலிடம் முடிவெடுத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. மாநில தலைவர் என்ற முறையில் கூட்டணி குறித்த அறிவிப்பை மே மாதம் வெளியிடுவேன் என்றெல்லாம் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு
இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை நேரடியாகவே பதிவு செய்துவிட்டனராம். தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. கூட்டணி குறித்து மேலிடம் தான் முடிவெடுக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு அண்ணாமலையின் அணுகுமுறை பிடிக்கவில்லையாம். இது ஒருபுறம் இருக்க இந்த தகவலை கேள்விபட்ட அதிமுகவினர், நாங்கள் யார் கூட்டணியையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
டெல்லி அழைப்பு
அண்ணாமலை இப்படி பேசியதும், நீண்ட நாட்களாக வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த அவருக்கு எதிரான கோஷ்டி உடனடியாக டெல்லிக்கு இந்த தகவலை பறக்கவிட்டுள்ளது. கட்சி பெயர் மிகவும் கெட்டுப்போய்விட்டது. யாரும் மதிப்பதில்லை. மூத்த தலைவர்கள் உள்ளிட்ட யாருக்கும் உரிய மரியாதை இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தன்னிச்சையாக பேசுகிறார். இது குறித்து உடனடியாக மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சரமாரியாக புகார்களை பட்டியலிட்டுள்ளார்களாம். இதனைக் கேட்டுக் கொண்ட டெல்லி, உடனடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலிடத்தின் ரியாக்ஷன்
அதில் இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், டஜன் கணக்கில் வரிசை கட்டும் புகார்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட இருக்கிறதாம். ஆனால், இதனையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் அண்ணாமலை, தனது தரப்பு விளக்கத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறாராம். கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ஆலோசிக்க டெல்லி மேலிடம் அழைத்திருப்பதாக கூறப்பட்டாலும், தமிழக விவகாரம் குறித்தே அவரிடம் பேச இருக்கிறதாம் டெல்லி.
மீட்டிங் முடிந்தபிறகு அதிமுகவுடன் அண்ணாமலை காட்டப்போகும் அணுகுமுறை மூலம் டெல்லி கொடுத்திருக்கும் அசைமெண்டை தெரிந்து கொள்ளலாம் என காத்திருக்கிறது ஒரு தரப்பு. அதேநேரத்தில் புகார்களுக்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்? அதற்கு டெல்லி என்ன சொல்லப்போகிறது? என்பதையும் அறிய காத்திருக்கிறது அண்ணாமலையின் எதிர்கோஷ்டி.