தனுஷ்கோடி கடற்பகுதிகளில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகளில் இருந்து பொரிந்த 335 ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடலில் சிறிய மீன் குஞ்சுகளை உண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்பதால், மீன்வளத்தை பெருக்கி மீனவர்களுக்கு நண்பனாக திகழ்கின்றன.
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கடலோர பகுதிக்கு வந்து ஆமைகள் முட்டையிடும். இவை பல்வேறு காரணங்கள் சிதைந்துவிடுவதால், ஆமைகளை பாதுகாக்கும் விதமாக முகுந்தராயர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டது.
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கம்பாடு, பச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் முட்டைகள் பொரிப்பகங்களில் வைத்து 45 நாட்கள் அடைகாக்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 14 ஆயிரத்து 20 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.