தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதிகளாக கொடுத்த மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை நடத்தி, மதுரை மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளாராம்.
மகளிர் உரிமை தொகை
திமுக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதிநிலை சரியாக இல்லாததால் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதனால், எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை வைத்தே ஈரோடு இடைத்தேர்தல் உள்ளிட்ட பிரச்சாரங்களில் கடுமையாக திமுகவை விமர்சித்து வந்தனர். திமுகவுக்கு இது நெருக்கடியாக இருந்த நிலையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கான உரிமைத் தொகை அறிவிப்பு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு நாளை தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டாயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.