மதுரை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் பொது வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் (யாதவா ஆண்கள் கல்லூரி அருகே) தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நடிகர் வடிவேல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள், 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் என குளிரூட்டப்பட்ட அரங்கில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி தொடங்க விழா இன்று காலை நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் திறந்து வைத்தார். இந்த புகைப்பட கண்காட்சி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் திரண்டனர். மாலையில் நடிகர் வடிவேலு புகைப்பட கண்காட்சியினை பார்வையிட வந்தார். அவரை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் திமுகவினர் வரவேற்றனர். நடிகர் வடிவேலு, கண்காட்சி முழுவதையும் சுற்றிப்பார்த்து ரசித்து அதன் விவரங்களை கேட்டு அறிந்தார். அப்போது அவரைப் பார்க்க கண்காட்சியை பார்க்க வந்த பொதுமக்கள் முண்டியத்தனர்.
அமைச்சர் பி.மூர்த்தி செய்தியார்களிடம் கூறுகையில், ”முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சி தொடர்பான இந்த புகைப்பட கண்காட்சியினை ஆன்றோர், சான்றோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து பார்வையிட வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு அடுத்த தலைமுறையினர் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்” என்றார்.