பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி இறந்ததை தொடர்ந்து, மனமுடைந்த தாய் தனது 7 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனமுடைந்த தாய்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் உப்புதராவில் உள்ள கைதபாதலில்(Kaithapathal) பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவத்தால் தாய் லிஜா (38) மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் லிஜாவையும்(Lija) பென்னையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுள்ளனர்.
தேவாலயத்திற்கு சென்ற மற்ற உறவினர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்குள், தாய் லிஜாவும் அவரது 7 வயது மகன் பென் டாம்(Ben Tom) இருவரும் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
வியாழக்கிழமை காலை லிஜாவின் குடும்பத்தினர் தேவாலயத்தில் இருந்து திரும்பி வந்த போது இருவரையும் காணவில்லை என்று தேடியுள்ளனர்.
இறுதியில் லிஜா மற்றும் மகன் பென் ஆகிய இருவரின் உடலையும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து உடல்களை மீட்டனர்.
அத்துடன் பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலம் இடுக்கியில் அரங்கேறியுள்ள பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த ஊர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.