“இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறைச் சிந்தனையுடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும்” என்று பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் சொற்பொழிவாற்றினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன், “கலியுகத்தில் சந்நியாசிகளில் அவதார அற்புத புருஷராக வாழ்ந்தவர் ஸ்ரீ மகா பெரியவர். நூறாண்டு காலம் வாழ்ந்த ஒரு புனிதர். உலகத் தலைவர் முதல் உள்ளூர் தலைவர் வரை பாரபட்சமில்லாமல் ஆசி வழங்கியவர்.
பிடியரிசித் திட்டத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். காஞ்சி மகா பெரியவரின் இந்து – இஸ்லாமிய ஒற்றுமையை நீதிபதி மு.மு. இஸ்மாயில் வியந்து பாராட்டி இருக்கிறார். ‘ஒரு நாளைக்கு ஒருவருக்காவது உணவு வழங்குங்கள் என்று சொன்னது மட்டுமன்றி தினந்தோறும் ஒரு நற்செயலும் புரியுங்கள்’ என்றார் மகா பெரியவர்.
வாழ்க்கையில் ஒரு குருவை சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த மண்ணில் ஒவ்வொருவரும் இறைச் சிந்தனையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அது அவர்களது வளர்ச்சிக்குப் பெரிய துணையாக அமையும்.
ஒவ்வொருவரும் தினந்தோறும் கனகதாரா ஸ்தோத்திரம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் திருமந்திரம் சிவபுராணம் படிக்க வேண்டும். ஹிந்துப் பெருமக்கள் நமது சமயச் சின்னங்களை விட்டுவிடக் கூடாது. தவறாமல் அணிந்து கொள்ள வேண்டும்.
தாய் தந்தையை எப்படிப் பேண வேண்டும் என்பதை ஆதிசங்கரர் தன் தாய்க்கு இறுதி சடங்கு செய்ததன் மூலம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும்.” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக காஞ்சி மஹா பெரியவரின் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.