அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.
வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடையும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட நேற்று காலை எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த பொதுச்செயலாளர் தேர்தலை தடை செய்யக்கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகிய இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேலும் வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த மூவரின் வழக்கும் இன்னும் சற்று நேரத்தில், விசாரணைக்கு வர உள்ளது. வழக்கை பொறுத்தவரை இருவிதமான உத்தரவுகள் வரலாம் என்று தெரிகிறது.
* பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை,
* தேர்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவு பிறப்பிக்கலாம்.
அதே சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் வாதம் வென்றால், ஓபிஎஸ் தரப்பின் மனுக்களை தள்ளுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
வழக்கின் விவரம் : பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அவசரமாக இந்த பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருப்பது, போட்டியிட விரும்புவோரை தடுத்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.