திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்து; லாரி மீது ஆம்னி வேன் மோதி சிறுமி உட்பட 6 பேர் பலி: குடந்தை கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்

திருச்சி: திருச்சி அருகே பேருந்தை ஓவர்டேக் செய்ய முயன்றபோது எதிரே வந்த லாரி மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியதில் பெண், சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாயினர். கும்பகோணம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முயன்றபோது  இந்த கோர விபத்து நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் தேத்தாபளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி(58), இவரது மகன் தனபால்(36). சேலம் கோனார்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி ஆனந்தாயி(57), இவரது மகன் திருமுருகன்(29), கோவிந்தன் மனைவி சகுந்தலா(28), இவரது மகள் தாவணாஸ்ரீ(9), நாமக்கல் ராசு மகன் திருமூர்த்தி(43), அப்பு(எ)முருகேசன்.

இவர்கள் அனைவரும் உறவினர்கள். இவர்கள் 9 பேரும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வாடகை ஆம்னி வேனில் நேற்றிரவு புறப்பட்டு கும்பகோணம் நோக்கி வந்தனர்.  வேனை சந்தோஷ்குமார்(31) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி மாவட்டம் திருவாசி பெட்ரோல் பங்க் அருகே திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை டிரைவர் சந்தோஷ்குமார் முந்த முயன்றபோது எதிரே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கரூரில் உள்ள பேப்பர் மில்லுக்கு மரக்கட்டைகள் லோடு ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் லாரியின் முன்பகுதி, 2 டயர்கள் கழன்று சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்தியதும் லாரி டிரைவர் செந்தில்குமார்(43) கீழே குதித்து தப்பியோடி ஓடிவிட்டார். இந்த விபத்தில் முத்துசாமி, ஆனந்தாயி, சிறுமி தாவணாஸ்ரீ, திருமூர்த்தி, முருகேசன், டிரைவரான சந்தோஷ்குமார் ஆகியோர் அந்த இடத்திலே பரிதாபமாக பலியாயினர். தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த வாத்தலை போலீசார், ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகிய 3 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மீட்பு பணியில் போலீசாருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டனர். இந்த கோர விபத்தால் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். கும்பகோணம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றபோது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கிய உடல்கள்
லாரி நேருக்கு நேர் மோதியதில் கார் நொறுங்கியதில் காருக்குள் சிக்கிய காயமடைந்த 3 பேரை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஒரு மணி நேரமாக போராடினர். பின்னர் 3 பேரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து காருக்குள் இறந்து கிடந்த 6 பேரின் உடல்களையும் போராடியே தீயணைப்பு வீரர்கள் எடுத்தனர்.

வேன் டிரைவரின் அஜாக்கிரதை
திருச்சி-முக்கொம்பு சாலை மிகவும் குறுகிய, வளைவுகள் அதிகம் உள்ள சாலையாகும். இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த குறுகலான சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை அஜாக்கிரதையாக ஓவர்டேக் செய்ய சந்தோஷ்குமார் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரியை கவனிக்காததால் அதன் மீது வேன் மோதி கோர விபத்து நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.