தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்..!!

ஆந்திர மாநில சட்டசபை கூட்டத் தொடர் அமராவதியில் கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது.அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் தம்மேனேனி சீதாராம் அனுமதி அளித்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ஏலூரி சாம்பசிவராவ் பேச முயன்றார். இதனால் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து பேச அனுமதி வழங்க கோரி கோஷமிட்டனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் எதிர்கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். 17 நிமிடங்களே பேச அனுமதி வழங்கியதால் மீண்டும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியை விட்டு கீழே இறங்கு. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெறிக்கும் சபாநாயகர் டவுன் டவுன் என கோஷம் எழுப்பினர். அவையின் நடவடிக்கையை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சீர்குலைப்பதாக சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் சபாநாயகரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அச்சன் நாயுடு, பால வீர ஆஞ்சநேய சாமி, ராம்மோகன், அசோக், சத்ய நாராயண ராஜு, சீன ராஜப்பா கானா பாபு, ஏலூரி சாம்பசிவராவ், வெலகப் புடி ராமகிருஷ்ணா, ஆதிரெட்டி பவானி உள்ளிட்டோர் ஒரு நாள் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் விவாதத்திற்கு பதில் அளிக்காமல் சஸ்பெண்டு செய்ததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கோஷமிட்டனர். இதையடுத்து சபை காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதற்காக சபைக்குள் வந்தனர். இதனைக் கண்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியேறி சென்றனர் இதனால் ஆந்திர சட்டசபையில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.