AIADMK General Secretary Election: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி குமரேஷ்பாபு முன் அவசர வழக்குகளாக இன்று (மார்ச் 19) விசாரணைக்கு வந்தன.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
அப்போது மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர், ஸ்ரீராம் ஆகியோர்,’பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்றுவிட்டு, மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும், வேட்புமனு தாக்கல் இன்று மாலை நிறைவு பெற்றுவிட்டதாக கூறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் வாதாடினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது எனவும் வாதிட்டனர். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் எனவும் தெரிவித்தனர்.
என்ன அவசரம்?
தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்களை அனுப்புகிறது எனவும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியையும் திருத்தியதன் மூலமும், சனி, ஞாயிற்று கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூறியதன் மூலமும் மற்றவர்கள் போட்டியிட விடாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் தரப்பை விளக்கினர்.
மேலும், அவர்கள்,”கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா?. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன?” என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, “ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் செல்லாததாகி விடும்” என ஓபிஎஸ் ஆதராவளார்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதிமுக, இபிஎஸ் தரப்பு
தொடர்ந்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர்,”பொதுச்செயலாளர் தேர்தல் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. இந்த ஒன்றரை கோடி உறுப்பினர்களில் 1 சதவீதம் பேர் கூட ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை.
உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைமுக மனுதாரர்களாக உள்ள மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகிய மூவருக்கும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எட்டு மாதங்களுக்கு பின் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்தாண்டு, ஜூலை 11இல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அமலுக்கு வந்துவிட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அடிப்படை உறுப்பினர்களும், பொதுக்குழுவும் ஒற்றைத் தலைமை விரும்புகின்றனர்.
அசாதாரண சூழலில் கட்சியின் எதிர்காலத்தை கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட கூடாது. கட்சி செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 உறுப்பினர்கள் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது” என வாதிட்டனர்.
மார்ச் 22இல் முடிவாகும்
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,”பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால், ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகளை, மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு முடிக்கலாம்” என்றார்.
இதனால், அத்தனை வழக்குகளையும் மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். தேர்தல் நடைமுறைகளை தொடர அனுமதித்த நீதிபதி, தீர்மானத்தை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டார்.