பாலக்காடு: மலப்புரம் அருகே 30 அடி பள்ளத்தில் வெங்காய லோடு லாரி கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அடுத்த கோட்டோப்பாடத்தை சேர்ந்தவர் சரத் (29). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். சாலக்குடி, வடக்கம்சேரியை சேர்ந்தவர் அருண்ஜார்ஜ் (22), சாலக்குடியை சேர்ந்த அனீஷ் (எ) உன்னிகிருஷ்ணன் (55). லாரி டிரைவர்.
இவர்கள் 3 பேரும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயம் லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிற்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். மலப்புரம் மாவட்டம், வளாஞ்சேரி அடுத்த வட்டப்பாறை வளைவில் லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலையின் நடுவே டிவைடரை தகர்த்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், லாரியில் சிக்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இது குறித்து வளாஞ்சேரி, திரூர் மற்றும் மலப்புரம் ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தவகல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்ட போது மூவரும் உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வளாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.