கொரோனா தொற்றுக்குள்ளான வீரருக்கு இரண்டு முறை ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே மறுபடியும் அணியின் முகாமுக்குள் நுழைய முடியும் என ஐபிஎல் கட்டுப்போடு போடப்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனிடையே, இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய மூன்று சீசன்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. பல்வேறு கட்ட பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் சூழலில் நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பதால், நடப்பாண்டு சீசனை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, எந்த அணி வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைப்படுத்தலின் போது அந்த வீரர் அணியிருனருடனோ, ஊழியர்களுடனோ இருக்க அனுமதிக்கப்படமாட்டார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வீரருக்கு 5 நாட்களுக்குப் பிறகு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். அதில் நெகட்டிவ் என முடிவு வந்தாலும், அவர் மீண்டும் அணியில் சேருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதிலும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அணியில் இணைய அனுமதிக்கப்படுவார். அதாவது 5 நாள் முடிந்து இரண்டு முறை கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே மறுபடியும் அணியின் முகாமுக்குள் நுழைய முடியும்.
கொரோனாவுக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் வீரருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிகுறி இல்லாத வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாது என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM