நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாக்., விமான போக்குவரத்து துறை| Pakistans aviation sector is reeling under financial crisis

கராச்சி,-பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு கடன் தொகை அதிகமாகி விட்டதாலும், பாகிஸ்தான் உள்ளூர் கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், அங்கு கடும் நெருக்கடி நிலவுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. இந்நிலையில், இந்த நெருக்கடி தற்போது பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறையிலும் எதிரொலித்துள்ளது.

கடந்த ஜனவரி நிலவரப்படி, பாகிஸ்தானுக்கு விமானங்களை இயக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய, 2,400 கோடி ரூபாய் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

இந்த தொகையை அமெரிக்க டாலராகத் தான் பாகிஸ்தான் செலுத்த வேண்டும். ஆனால், ஏற்கனவே அங்கு நிதி நெருக்கடி நிலவுவதாலும், ரொக்க கையிருப்பு இல்லாததாலும், இந்த தொகையை அவர்களால் செலுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.

விமான நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை உள்ளூர் கரன்சிக்கு விற்றாலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான கட்டணத்தை அமெரிக்க டாலராகவே செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

latest tamil news

ஆனால், பாகிஸ்தான் விமான போக்குவரத்து கழகத்திடம் அந்த அளவுக்கு நிதியில்லை. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விமானங்களை இயக்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் கடந்த மாதம் முதல், பாகிஸ்தானுக்கான விமான சேவையை நிறுத்தி விட்டது.

அடுத்த சில வாரங்களில் மற்ற விமான நிறுவனங்களும் இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.