பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் வாரீஸ், `பஞ்சாப் தே’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவரது அமைப்பில் பஞ்சாப் முழுவதும் ஏராளமானோர் இருக்கின்றனர். இளைஞர்களிடம் ஆயுத கலாசாரத்தைத் தூண்டி வருவதோடு, ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டு வரும் அம்ரித்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அவரைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நேற்று பஞ்சாப் போலீஸார் ஈடுபட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அம்ரித்பால் சிங் ஜலந்தர் மாவட்டத்தில் இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனே போலீஸ் படை அம்ரித்பால் வாகனத்தை துரத்திச்சென்றது. இரவில் போலீஸ் வாகனங்கள் அம்ரித்பால் வாகனத்தை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்றன.
ஆனால் நூலிழையில் அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து ஜலந்தர் போலீஸ் கமிஷனர் கே.எஸ்.சஹல், “அம்ரித்பால் சிங்கை போலீஸார் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்றனர். ஆனால் அவர் தப்பிச்சென்றுவிட்டார். இருப்பினும் அவரின் ஏராளமான ஆயுதங்கள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்ய தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார். அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி பல்பீர், அம்ரித்பால் சிங்கின் ஆலோசகர் சரப்ஜீத் சிங் உட்பட 7 பேர் நேற்று இரவு நடத்திய தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். பஞ்சாப், ஹரியானா முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவர்களைக் கைதுசெய்வதற்காக இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை நாளை வரை முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக நடத்தி வரும் சோதனையில் இதுவரை 78 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறப்பு விமானம் மூலம் அஸ்ஸாம் திப்ருகர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பஞ்சாப் முழுக்க உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் அமிர்தசரஸ் நகர் காவல் நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்திவிட்டு தங்களது கூட்டாளி ஒருவனை அம்ரித்பாலும் அவனது கூட்டாளிகளும் விடுவித்துச்சென்றனர். இதனால் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதைத் தொடர்ந்தே அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியது. வாரீஸ் பஞ்சாப் தே அமைப்பை நடிகர் தீப் சித்து தொடங்கினார். ஆனால் தீப் சித்து கடந்த ஆண்டு விபத்தில் இறந்துபோனார். இதனால் அந்த அமைப்பின் தலைவராக அம்ரித்பால் தன்னை அறிவித்துக்கொண்டார்.