ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிட முழுநேர அரசு வழக்கறிஞர்கள் இருகின்றனர். அதுபோல வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட முழு நேர வழக்கறிஞர்களை நியமனம் செய்ய புதிய திட்டத்தை தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு ஒரு தலைமை சட்ட உதவி வழக்கறிஞர், இரண்டு சட்ட உதவி வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று உதவி வழக்கறிஞர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இணையதள முகவரி அல்லது மாவட்ட நீதிமன்ற இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் நேடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ வருகிற 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்டத் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.