புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயல் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனது குடும்பத்தினருடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் முதலில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டனர்.
இதையடுத்து இந்த கார் கிருஷ்ணா குப்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியது தெரிய வந்தது.