புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் தீவிரவாத படையை உருவாக்கும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டில் கேரளாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு கலவரங்கள், படுகொலைகள், தீவிரவாத தாக்குதல்களில் அந்த அமைப்புக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் பிஎஃப்ஐ மற்றும் அதனோடு தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீது பல்வேறு மாநிலங்களின் என்ஐஏ நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த 13-ம் தேதி ஜெய்ப்பூர், 16-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீதான வழக்குகளில் சென்னை, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றங்களில் நேற்று முன்தினம் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த 4 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் கூறியிருப்பதாவது: பிஎஃப்ஐ அமைப்பு சார்பில் பல்வேறு மாநிலங்களில் ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. யோகா பயிற்சி என்ற பெயரில் முகாம்களுக்கு முஸ்லிம் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்த முகாம்களில், கொலை செய்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது எதிராளியின் கழுத்து, வயிறு, தலையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி கொடூரமாக கொலை செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் பிஎஃப்ஐ சார்பில் முஸ்லிம் இளைஞர்கள் அடங்கிய தீவிரவாத படைகளை உருவாக்கி பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. இதற்காக செய்தியாளர் பிரிவு, ஆயுத பயிற்சி பிரிவு, சேவைப் பிரிவு, நீதிமன்றம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டிருந்தன.
பிஎஃப்ஐ நீதிமன்றங்கள் மூலம் அவ்வப்போது முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நபர்களை கொலை செய்ய இந்த நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தன. அந்த உத்தரவுகளை ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் செயல்படுத்தினர்.
பிஎஃப்ஐ சார்பில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் பணம் அனுப்பப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாக்கி திட்டமிட்டு கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றாக பிஎஃப்ஐ சதித் திட்டம் தீட்டி இருந்தது. அனைத்து சதித் திட்டங்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த அமைப்போடு தொடர்புடைய 19 பேரின் 40 வங்கிக் கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பலருடைய சொத்துகளும் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு என்ஐஏ குற்றப்பத் திரிகைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.