பீஸ்ட் பட வில்லன் நடிகரின் மனக்காயத்துக்கு மருந்து பூசிய நானி
தெலுங்கில் நானி நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கும் படம் தசரா. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, கதையின் நாயகனாக என வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் தான் சாக்கோ.
அதே சமயம் கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் தன்னை வெகு சாதாரண கதாபாத்திரம் கொடுத்து அவமானப்படுத்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஷைன் டாம் சாக்கோ. அதன் பிறகு அப்படி சொன்னதற்காக வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது தசரா படத்தில் முக்கிய வில்லனாகவே நடித்துள்ளார் சாக்கோ.
இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் இவரது நடிப்பு படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களில் ஒன்று என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இவரை பாராட்டி பேசி வருகிறார் கதாநாயகன் நானி. தமிழ் சினிமாவை போல அல்லாமல் தெலுங்கில் முதல் படத்திலேயே இந்த அளவிற்கு பெருமைப்படுத்தியுள்ளார்களே என்கிற மகிழ்ச்சியை மலையாள சேனல்களின் பேட்டிகளில் வெளிப்படுத்தி உள்ளார் ஷைன் டாம் சாக்கோ. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இவர் பட்ட மன காயங்களுக்கு தெலுங்கில் தசரா மூலம் மருந்து பூசி உள்ளார் நானி.