ஆண்மையற்றவர்னு சொல்ற மாதிரி பெண்மையற்றவர்னு ஒருத்தரை சொல்ல முடியுமா? – இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
“இந்தத் தொடரில் ஆண்மையற்றவர் என்று எந்த ஆணையும் சொல்லிவிட முடியாது என்பதை, காரணங்களுடன் விளக்கியிருந்தேன். அதேபோல, எந்தப் பெண்ணையும் பெண்மையற்றவர் என்று சொல்லி விட முடியாது.
ஒரு பெண்ணை, பெண் என்று அடையாளப்படுத்த பல அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் மார்பகம், பெண்ணுறுப்பு ஆகியவை வெளியில் தெரிகின்ற உறுப்புகள். இவற்றின் அளவுகளை வைத்து பெண்மை நிரம்பியவர், பெண்மையற்றவர் என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அடுத்து, உடம்புக்குள் இருக்கிற பெண்ணுறுப்பின் பாதை, கருப்பை, சினைப்பை, கருக்குழாய்கள் ஆகிய உறுப்புகளும் பெண் என்பதற்கான அடையாளங்களே. இவற்றில் ஏதோவொன்றில் பிரச்னையிருந்தாலும், அவை பெரும்பாலும் சரி செய்யக்கூடியவையாகவே இருக்கும்.
தவிர டி.என்.ஏ பரிசோதனையில் 46 XX குரோமோசோம் இருப்பதும் பெண் என்பதற்கான அடையாளமே. பெண்ணின் உடலில் பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் அதிகம் இருக்கும். மூளையிலும் ஆண் மூளை, பெண் மூளை என்று இருக்கிறது.
இதில், பிரச்னை என்று பார்த்தால், சில பெண் குழந்தைகளுக்கு, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, ஜெனிட்டிக் கோளாறு காரணமாக குரோமோசோம்கள் 47 XXY என இருக்கலாம். இவர்கள் உருவ அளவில் பெண் போல இருப்பார்கள். ஆனால், உள்ளும் புறமும் பெண்ணுக்கான உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது.
இதேபோல, ‘உலகம் என்னைப் பெண்ணாக அடையாளப்படுத்தினாலும் நான் என்னை ஆணாக உணர்கிறேன்’ என்று சிலர் நினைக்கலாம். இதை, ஜென்டர் ஐடென்டிட்டி டிசார்டர் (gender identity disorder) என்போம். இதையும் பெண்மையற்றவர் என்று சொல்ல முடியாது. அவர் தன்னை ஆணாக உணர்கிறார். மொத்தத்தில், ஒருவரை ஆண்மையற்றவர் என்றோ அல்லது பெண்மையற்றவர் என்றோ மற்றவர்கள் சொல்லிவிட முடியாது என்பதே மருத்துவ உண்மை” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.