சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறுவதுதான் சட்ட விதி. கட்சியின் உச்சபட்ச பதவி, அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அமைப்பு ரீதியான மற்ற தேர்தல்களை நடத்த வேண்டும். தேர்தல் நடத்துவதாக இருந்தால், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவை எதுவும் முறைப்படி செய்யாமல், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறார்கள்.
எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாநாடு நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் நடைபெறும்.
எங்குபோனாலும் எதிர்ப்பு வரும்: கட்சியை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு. சிறப்பான ஒரு கட்சியை நாசமாக்கும் செயலை, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவோம். பழனிசாமி தமிழகத்தில் எங்குபோனாலும், அவருக்கு எதிர்ப்பு கிளம்பும். இந்த நிலையை அவரேதான் உருவாக்கிக்கொண்டார்.
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம், தகுதி யாருக்கும் கிடையாது. பழனிசாமிக்கு ஆதரவாக அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் இருந்தாலும், அது 5 ஆண்டுகளில் காலாவதி ஆகிவிடும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம். சட்ட ரீதியாக அதை எதிர்கொள்வோம். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் மாபெரும் இயக்கமான அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இந்த இயக்கத்தில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றுபட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இயக்கத்தை சீர்குலைக்கும் செயல்: இந்த இயக்கத்தை சீர்குலைக்கும் செயலில் பழனிசாமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள், உள்ளத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை முறைப்படி நடத்தவும், பொறுப்பாளர்களை முறைப்படி தேர்ந்தெடுக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.
இனியும் அவர்கள் திருந்துவார்கள், இணைந்து செயல்படுவார்கள் என்று நாங்கள் கருதவில்லை. நமக்கென நேரம் வரும். அதுவரை உண்மைத் தொண்டர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இந்த தேர்தலைப் பொருட்படுத்த வேண்டாம்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, அந்த தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற சாதாரண அறிவுகூட ஒரு அரசியல்வாதிக்கு இல்லை என்றால், அவர் அரசியல் நடத்த தகுதி உள்ளவரா? இவ்வாறு அவர் கூறினார்.