மதுரை: மதுரையில் வடக்கு, மாநகர், தெற்கு மாவட்டங்கள் இணைந்து லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வசதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று பார்வையிடுகிறார். மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தல் திடலில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ‘மக்கள் பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற தலைப்பில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியினை காலை 10 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்பட கண்காட்சியினை பார்வையிடுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை, மிசா சிறை அனுபவம், எம்எல்ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய பதவிகளை அலங்கரித்தது, பங்கேற்ற போராட்டங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. முதல்வரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் என லட்சக்கணக்கானோர் திரளாக வந்து பார்க்க இருக்கின்றனர். இந்த புகைப்படக் கண்காட்சியை அனைத்து தரப்பு மக்கள், இளைஞர்கள், திமுக நிர்வாகிகள் அனைவரும் பார்வையிட வருமாறு வரவேற்கிறோம். கண்காட்சியை காண வருபவர்களுக்கு வசதியாக கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.