மதுரை: மதுரையில் துவங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால வாழ்க்கை பயண கண்காட்சியை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். மதுரை, நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ‘‘சென்னைக்கு அடுத்து இங்கு கண்காட்சி இன்று (நேற்று) தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் மற்றும் 70 ஆண்டுகால பொது வாழக்கையில் முதல்வர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள்.
தத்ரூப காட்சி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக செல்பி மேடை உள்ளது. அரசியல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்ததை குறிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களை இடம் பெற்றுள்ளன’’ என்றார். கண்காட்சியை நடிகர் வடிவேலு நேற்று மாலை வந்து பார்வையிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனித்து பார்த்து அது குறித்து தகவல்களை கேட்டறிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சியை பார்த்த வடிவேலு, அங்கு சிறிது நேரம் நின்று உற்றுப்பார்த்து, அவரது சிறைப்பாடுகள் தத்ரூபமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டனர். செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.