மதுரை: மேலூர் அருகேயுள்ள பதினெட்டாங்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்சம் தர மறுக்கும் விவசாயிகள் குண்டர்களைக் கொண்டு தாக்கப்படுவதாகவும், எனவே அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 100க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டுபடியான விலை கிடைப்பதால் விவசாயிகளும் இடைத்தரகர்களை நாடாமல் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை நாடி வருகின்றனர். நாடிவரும் விவசாயிகளிடம் தூற்றுகூலி, சுமை கூலி என ஒரு மூட்டைக்கு ரூ.80 வரை நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
லஞ்சம் தர மறுப்பவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்வதாகவும், நெல் தூற்றும் இயந்திரங்களை இயக்கும் ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு கெடுபிடியாக லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், லஞ்சம் தர மறுப்பவர்கள் குண்டர்களைக் கொண்டு தாக்கப்படுவதாகவும் விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார் தெரிவித்தனர்.
அதனையொட்டி மதுரை மேலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் அருகே பதினெட்டாங்குடியிலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நிலவும் முறைகேடுகளை தடுக்கக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒரு மூட்டை சிப்பத்திற்கு ரூ.80 லஞ்சம் கேட்பதாகவும், தர மறுப்பவர்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.