ஜோஹோ (Zoho) என்றாலே தமிழ்நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்று. சாப்ட்வேர் சேவையை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம். இதன் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருந்து சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திற்கு திரும்பி கிராமப்புற இளைஞர்களின் மேம்பாட்டிற்காக தீவிரம் காட்டுபவர் போன்ற விஷயங்கள் தான் பலருக்கும் நினைவில் தோன்றும்.
ஜோஹோ நிறுவனம்
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வேலையில் சேர்ந்தால் அவர்களே மேற்படிப்பும் படிக்க வைத்து விடுவர். கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணமுண்டு. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் ஜோஹோவில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பலரது கனவு நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறிப் போயிருக்கிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது கிளைகளை திறந்து வருகிறது.
மதுரை காப்பலூரில் கிளை
அந்த வகையில் மதுரையில் உள்ள காப்பலூர் பகுதியில் ஜோஹோ நிறுவனத்தின் கிளையை திறக்க கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 40 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த கிளை திறக்கப்பட்டால் சுமார் 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
தொழில் வளர்ச்சி
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இரண்டாம் நிலை நகரங்களிலும் வேகமெடுத்து வருகிறது. அதற்கு உதாரணமாக கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை சொல்லலாம். இதில் மதுரையில் கொண்டு வரப்படும் வசதிகள் தென் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஜோஹோ போன்ற நிறுவனங்கள் அடித்தளம் போட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டம்
மதுரையில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஜோஹோ நிறுவனத்தை பொறுத்தவரை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை கடந்த சில ஆண்டுகளாக குறைத்து வருகிறது.
கிராமப்புற வளர்ச்சி
ஏனெனில் இதன் வளர்ச்சியின் விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும் கிராமப்புற வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது என்ற இலக்கை நிர்ணயித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெண் தொழில் முனைவோர்கள்
இன்றைய தினம் (மார்ச் 19) ஸ்ரீதர் வேம்புவின் சொந்த கிராமத்தில் சுய உதவிக் குழுவை சேர்ந்த 1,500 பெண்களை அழைத்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.