செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, வழியில் அறுந்துகிடந்த உயர்மின்னழுத்த மின்கம்பியைப் பார்த்து திடீரென பிரேக் பிடித்தபோது, நிலைதடுமாறி அந்த கம்பி மீதே விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகடும்பாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டம் என்பவர், இருசக்கர வாகனத்தில் தனது 10 வயது மகன் ஹேமநாதனை அழைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
வயல் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தபோது, வழியில் உயர்மின்னழுத்த கம்பி ஒன்று அறுந்துகிடந்ததைப் பார்த்து வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.
திடீரென பிரேக் பிடித்ததால் நிலைதடுமாறியதில், தந்தையும் மகனும் அந்தக் கம்பி மீதே விழுந்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்பகுதிகளில் மழை பெய்தததால் மின்பழுது ஏற்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்தில் இன்சுலேட்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் மின்கம்பி அறுந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.