சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் டெல்லி செல்கிறார்.
பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி குறித்து மே மாதம் முக்கிய முடிவை தெரிவிப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் கூட்டத்தில் அண்ணாமலை பேசினாராம். இந்தக் கருத்துக்கு பாஜகவிலேயே ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகின்றன. எனினும், கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கூட்டணி விவகாரம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், உட்கட்சி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 26-ம்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த வாரம் இரு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ள நிலையில், 26-ம் தேதி டெல்லி பயணம் ரத்தானால், வரும் 27-ம் தேதி அண்ணாமலை டெல்லி செல்வார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.